Wednesday, 10 October 2018

உன் பெயர்

என் புதிய பேனா முனையும்
உன் பெயரைதான்
முதலில் எழுதகேட்கிறது

- மூ.முத்துச்செல்வி

என் உறவு

பற்றற்ற திருமேனி
பற்றற்று போகிறான்
எட்டியே பிடிக்க துடிக்கிறது
என் கைகள்...
பற்றில்லை உன்பால்
உரைக்கிறது அவன் வாய்மொழி
நீ மட்டும் என் உறவு
சொல்லிடும் மனமொழி
உறவுகளை துறந்தவனுக்கு
உறவு நான் மட்டுமே!..

- மூ.முத்துச்செல்வி

என் கோபம்

முழுமதியிடம்
கதிரவன் கொண்ட
காதல்
நடுவானில் அதன் கோபங்களை
தன் செங்கதிரால்
மறைக்கிறது...
அதுபோல்
தண்ணீர் தமாரையாய்
தத்தளிக்கிறது
என் கோபங்கள்
சினம் கொண்டு நெருங்கினாலும்
அழகிய காதலால்
மனம் கொள்ள வைக்கிறது
அவன் பார்வை....

- மூ.முத்துச்செல்வி

அவன் காதல்...

வான்மதி கொஞ்சும்
வான்பொழுது
மெல்லிய மூச்சுக்காற்று
வருடும் தருணம்
வானவில் உதடுகள்
நெற்றியில் முத்தமிட
மலர்ந்தது காதல்...
சிறு கோபங்கள்
சிறு சலனங்கள்
இருந்தும் புன்னகைக்கும்
காதல்...
உதட்டில் உருளும்
புன்னகை...
விரிகிறது நாட்களின்
தொடக்கம்...
என்னவன்
அவன்தான்...
மார்கழி குளிரில்
பூத்த மலர்தான்...

- மூ.முத்துச்செல்வி

Thursday, 16 August 2018

மழைஅரசி !

மழைஅரசி !
இவள் கொண்ட கோபம் 
மானிடன் இவன் செய்த பாவம் 
மன்னித்துவிடு!
மக்கள் நாங்கள் 
மகிழ்ச்சி பெற வழிவிடு!
இருக்கும் இடத்தை விட்டு 
இல்லாதவர்க்கு அருள்புரிவாய்!
எங்கள் குறைகேட்டு 
மழைஅரசியே மன்னித்துவிடு!
உன்னை வேண்டாம் 
என்று சொல்லவில்லை 
வேறுஒருநாள் வா என்கிறோம்!
இன்று சென்றுவிடு!
உன் ஆதங்கம் போகட்டும் 
ஆனந்தம் கொண்டு சென்றுவா!
ஆறுதல் நாங்கள் அடைய 
அடைக்கலம் தா!
இந்த வளம் நீ தந்தது 
இந்த செழுமை நீ தந்தது 
நீயே இதை அழிக்கலாமா?
மூடர்கள் எங்களை வாழ்த்தி 
முக்கடலில் சங்கமித்துவிடு 
அன்னையே!

-மூ.முத்துச்செல்வி 

Tuesday, 14 August 2018

கேள்வியான சுதந்திரம்


யாருக்கு வேண்டும் இந்த சுதந்திர தினம்?
யாரிடமும் இல்லை சுதந்திரம்
சுதந்திரம் யாரிடம் உள்ளது
பெண்கொடுமை, வன்கொடுமை
இதிலுள்ள சுதந்திரம்
ஆடம்பரத்திற்கு பிறர்
ஆடைகள் களவுகொள்வதில் சுதந்திரம்
திரையில் இரட்டை வசனத்தில்
சுதந்திரம் -வளரும் தலையும்
உச்சரிப்பதில் சுதந்திரம்
போலிகள் பின் செல்லும்
அரசியலில் சுதந்திரம்
இறைவன் என்ற பெயரில்
இம்சைகளுக்கு சுதந்திரம்
பொருளாதார பதாளத்திற்கு
சுதந்திரம்.
மக்கள் வெள்ளத்தில்
தவிக்கும் போது
இங்கு சுதந்திர தினமும் வேண்டுமோ!
தியாகிகளின் நினைவுதான்
சுதந்திர தினம்
மறுக்கவில்லை
ஆனால் இங்கு
நாங்களே திராணியின்றி இருக்கிறோமே

-மூ.முத்துச்செல்வி

Monday, 13 August 2018

ஹைக்கூ

நேரம் நீள்கிறது 
கானம் படபடக்கிறது 
மெல்லிய புன்னகையால்!

- மூ.முத்துச்செல்வி  

கடவுள் தேசம்












மும்மாரி மழைப்பொழிவு
முகப்பொலிவு கொண்டு
இயற்கை கொஞ்சிக்கிடக்கும்
மலை கீதம் மாணிக்கமாய்
மழலை மொழியும் இனிமை
ஆதவன் ஆருடம் செய்திடும்
அருவி அழகி அழகிட
உண்மையில்
கடவுள் தேசம்தான்

மழைவெள்ளம் வந்தும்
ரசித்த மக்கள்
வெள்ளமும் மகிழ்ந்தாள்...

வீழ்ந்துகிடக்கும் இயற்கை
சிலர் செயலால்
இடுக்கி அன்னை
இட்ட கட்டளை - மனித ஆசை
இஷ்டங்கள் எல்லாம்
இயற்கை தன்வசமாக்கியது..

இயற்கையன்னை
ஆழ்ந்து உரைக்கிறாள்
இது என்னுடையது என்று!
எங்களை மன்னித்துவிடு
பிறப்பின் அருமை
புரியாதவர்கள் நாங்கள்!
உன்னை காக்க மறந்தோம்!

- மூ.முத்துச்செல்வி 

தமிழே நீ

அருள் தந்து
மருள் தந்து
இருள் தந்து போனாய்
என்னுள் பொருள் தந்து போனாய்

சந்தம் தந்து
நயம் தந்து
பாடல் தந்து போனாய்
என்னுள் சுகம் தந்து போனாய்

பிழை தந்து
மாற்றம் தந்து
மாயை தந்து போனாய்
என்னுள் நிலை தந்து போனாய்

தொடக்கம் தந்து
முடிவு தந்து
தியாகம் தந்து போனாய்
என்னுள் தொடர்கதையாய் போனாய்

- மூ.முத்துச்செல்வி 

Saturday, 11 August 2018

உன்னால் முடியும்!

உன்னால் முடியும்!
ஆம் நம்மால் முடியும் 
துணிவு கொள்!
துணிச்சல் உன்னிடம் சரணடையும் 
உன் பாதை 
உன் பாதங்களால் மட்டுமே!
உன் கையெழுத்து - ஒருநாள் 
பிறரின் கையேடாக மாறும்!
பொறுமை கொள் 
விதை போல் 
வெற்றி கொள் 
மரம் போல்!
முடியும் நம்பு!
முடிவுகூட நீ வரைவாய்!
போராட்டம் கொள் 
போர்க்களங்கள் கூட 
பூக்களமாகும்!
உன் எண்ணம் 
உன் செயல் 
உருவாகட்டும் புதிய பாதையை!

- மூ.முத்துச்செல்வி  

Friday, 10 August 2018

தமிழே நீ வாழ்க!

பேரருள் ஊட்டிய கானத்தினால்
பேதை எனைபாட வைத்தாய்யோ?

சிந்திய சலனம் செழிக்கும் முன்னே
சிந்திய சலனம் செழிக்கும் முன்னே
சிந்தையில் வந்தெனை ஆட்கொண்டாயோ?

மந்திய மனங்கள்
மயங்கும் முன்னே
மதியில் வந்து சேர்ந்தாயோ?

பாற்கடல் பயில - உன்
பாதம் பணித்தேன்!

- மூ.முத்துச்செல்வி

Tuesday, 7 August 2018

தலைவா


உங்கள் இலக்கணம் தனி
உங்கள்
இலக்கியம் தனி
நாடக தமிழும் தனி
கர்ஜிக்கும் குரல்
அதில் விழும் வார்த்தைகள்
ஆர்ப்பரிக்கும் தமிழ்
ஆளுமை கொஞ்சும் வரிகள்
ஐக்கியம் ஆன மொழி
கவிதை எழுதும் போதே
ஏனோ உங்களுக்காக
வழிகிறது
சிறு துளி கண்ணீர்.
உங்கள் தமிழ்
உச்சரிக்கும்
உங்கள் புகழ்.

- மூ.முத்துச்செல்வி

Monday, 23 July 2018

ஹைக்கூ

சலசலக்கும் இதயத்தில் 
துடிதுடிக்கும் 
அவள் நினைவுகள் .....

- மூ.முத்துச்செல்வி

யாரை நம்ப!?

தோழன் என்று 
நினைத்தேன் 
தோளில் வலிமை 
இழந்தேன் 
காதலன் என்று 
நினைத்தேன
கேளிக்கைச் 
செய்தான் 
முதியவன் என்று 
நினைத்தேன் 
முந்தானை 
கேட்கிறான் 
தந்தை என்று 
நினைத்தேன் 
தன்மானம்
இழந்தேன் 
கயவன் என்று நினைத்தால் 
நான் வாழும் பூமியே 
நரகம் என்றானது  
பெண் என்றேன் 
வேடிக்கைச் செய்தான்  
யாரை தான் நம்புவது 
பெண் கடவுள்களை 
காணும் தேசத்தில் 
வேலி என்று கிடைத்தான் 
நம்பினேன் 
ஆனால் 
துரோகியே அவன் தான் 
யாரை நம்ப!?.

- மூ.முத்துச்செல்வி 


Tuesday, 17 July 2018

காதலுடன் காற்று

குழல் கொஞ்சும் 
காற்றில் 
குயிலுடன் ஒரு பயணம் 

நம் காதலால் 
காற்றுக்கும் பொறாமையோ 
ஆடி பேரிரைச்சல்

தென்றல் தாளத்தில் 
காற்றாய் 
உன் காதல் வருட 

மேகங்கள் பிணைக்கும் 
காற்றை போல் 
நம் காதலும் பிணையட்டும் 

காற்றுக்கு நன்றி உரைப்பேன் 
நம் காதலை 
உலகுக்கு உரைப்பதால் 

-மூ.முத்துச்செல்வி  


Monday, 16 July 2018

உன் நினைவு


மரிக்கின்ற வேளை 
உன் நினைவை 
மறைக்க வேண்டும் 

உதிர்கின்ற வேளை 
உன் நிழலில் 
உதிரம் சிந்த வேண்டும் 

ஏக்கம் கொள்ளும் வேளை 
உன் எண்ணங்களை 
ஏந்திட வேண்டும் 

யாமம் வருடும் வேளை 
உன் நினைவுகளுடன் 
யாகம் சேர்ந்திட வேண்டும் 

காதல் வந்திடும் வேளை 
உன் நினைவுடன் 
காலம் போக்கிட வேண்டும்

தனிமை இருக்கும் வேளை 
உன் கனவுகளுடன் 
 துயில் கொள்ள வேண்டும்

நீரற்ற மீன்கள் போல் 
உன் நினைவில்
நாளும் துடித்திட வேண்டும் 

-மூ.முத்துச்செல்வி  

இயற்கையன்னை


வீறுகொண்ட மாமேனி
செந்நிற மேனியில்
வீற்றிருக்க
வீர மகள்
நாளும் போற்ற
வையம் போற்ற
வாழ்த்திடுமே உன் புகழை 

நானிலம் நீ 
நீரும் நீ 
வானும் நீ 
கண்ணீர் துளியும் நீயே!
கதிரவன் காதலியே 
நிலவொளி தலைவியே 
நீலநிற மேனியாலே!
பண்ணும் நீ 
என் 
பாட்டும் நீயே!

பாடும் கானம் 
எல்லாம் 
உன்  தாள் பணிய 
அன்னை உருவே 
எங்கள் உயிரே 
மன்னிப்பாயாக!

- மூ.முத்துச்செல்வி 


Wednesday, 4 July 2018

நீ!

சொப்பணங்கள் பல கண்டும்
நான் காணாத சொப்பணம்
நீ!
திசைகள் பல தேடியும்
நான் போகாத திசை
நீ!

- மூ.முத்துச்செல்வி 

பாவி நான்

பகலவன் புகழ்ந்தான்
புகலவன் நான் கொண்டேன்
படைத்தவன் பித்தானான்
பாமரன் நான் வித்தானேன்
ஓதியவர் எல்லாம் ஓய்ந்திட 
ஓடமாய் நான் நின்றேன் 
பூக்கள் எல்லாம் காய்ந்திட 
புழுக்களுக்கு உரமானேன் 
வண்ண மேனியால் 
என்னை கேக்கிறாள் 
வாடி நான் நின்றேன் 
அழுக்குக்களின் புகலிடம்  
அனைத்திற்கும் முதல் இடம் நான் 
காடு மேடு எல்லாம் 
கஞ்சியுடன் நான் உழைத்தேன் 
ஆதரவுடன் நான் வருட 
பாவி அவள் என்னை நம்பினாள் 
என் செய்ய 
என் விவசாயமே!

-மூ.முத்துச்செல்வி  

Tuesday, 5 June 2018

மாற்றம் ஒன்றே மாறாதது


மாற்றம்!
அனைத்தும் மாறும்!
அதிகாரம் மாறும்
ஆண்டவன் அடிமையாவான்
அடிமை ஆண்டவனாவான்
போலிகள் உண்மையாகும்
உண்மை போலியாகும்
வாழ்க்கை நரகமாகும்
நரகமே வாழ்வாகும்
பேதை வீரனாவான்
வீரன் கோழையாவன்
காதல் மாறும்
காற்றும் மாறும்
கடல் அலை நிறம் மாறும்
கழிவுகள் ஆறாய் மாறும்
ஆறுகள் ஓடையாய் மாறும்
பணம் வந்ததும்
குணம் மாறும்
குணம் வந்ததும்
பணம் கை மாறும்
அகிலம் எல்லாம் மாறும்
குத்தும் ஓட்டும் காசாய் மாறும்
மறதியில் மனிதனும் மாறுவான்
ஆம்!
மாற்றம் ஒன்றே மாறாதது!
சிந்திக்கும் சமூகமாய்
நாம் மாறும்
நாளும் எங்கே?

- மூ.முத்துச்செல்வி 

Wednesday, 23 May 2018

மாற்றம் எதிர் நோக்கி

தலைமை சரி இல்லா தேசத்தில்
தலையெழுத்தை மாற்ற துடித்தோம்

உழுதுண்ட தேசத்தில்
உயிர்ப்பலி கேட்கும்
மிருகங்கள் கண்டோம்.

உப்பு காற்றில்
உண்மை பாசம் கொண்டோம்
குருதி குடிக்கும்
கூட்டம் கண்டோம்.

புற்றுநோய் காற்றை எதிர்த்தோம்
புற்றுப்போல் மிதித்தது
அடிப்பணிந்த தலைமை கூட்டம்.

அடுக்கிய ஆத்திரம்
ஆகாயமாய் விரிந்திடும்
ஆணவ அரசே கேட்டுக்கொள்!

- மூ.முத்துச்செல்வி

Sunday, 13 May 2018

தேடுகிறேன்

உன் கண்களில்
ஒளிந்த என்னை
சல்லடையிட்டு தேடுகிறேன்
வீதியெல்லாம்.

- மூ.முத்துச்செல்வி

தொலைந்த வரிகள்

இரு விழி அழகை 
துரிகையாகினேன் 
தொலைந்தது என் வரிகள்...

-மூ.முத்துச்செல்வி

Sunday, 6 May 2018

நீயும் நானும்

அவசர யுகங்கள் நடுவிலே
படப்படப்பின் இடையிலே
வளர்ந்த காதலே!
ஓடும் வாழ்க்கை
ஓய்ந்த கால்கள்
ஓயவில்லை காதல்
ஏமாற்றம் நிறைந்த வாழ்வில்
ஏமாற துடிக்கிறது மனம் 
காதலில் மட்டும்
விசிறி இருந்தும்
வீச மனமில்லை 
காதலின் விசிறியாய் ஆனபின்
காதலே!
காதலுக்கு
தத்துப்பிள்ளை
நீயும் நானும்!

-மூ.முத்துச்செல்வி


Saturday, 21 April 2018

காதலே வந்துவிடு!!!

காதலே!
கடவுச்சொல்லாய் 
மாறினாய் 
என் இதயக்கூட்டில் 
களவுபோனாய்!

கூடு உடைந்த 
பட்டாம்பூச்சியாய் திரிகிறேன் 
உன்னைத் தேடி 

நகக்கண்ணில் வேதனை 
மனக்கண்ணில் உன் பிம்பம் 
பிரிந்தது போதும் 

மூச்சிக்காற்றை மொத்தம் 
தொலைத்தேன் 
நச்சுப்புகையில் 
வாழ்கிறேன்.

காதலே 
வந்துவிடு 
இல்லை என்னை 
கொன்றுவிடு!

- மூ.முத்துச்செல்வி 

Thursday, 19 April 2018

காதல்

அன்பின் உருவே
ஆசைக் கனியே
இன்னல் துடைத்து
ஈகை அருள்வாய்
உன்னுள் பாதி
ஊடல் கொள்ள
என்னுள் மீதி
ஏற்றம் கொள்ள - விரல்
ஐந்தும் பின்ன
ஒன்றிய எண்ணங்கள்
ஓதிடும் நம் காதலை
ஒளடதம் தந்தாய் 
அஃதே வியந்தேன் 

- மூ.முத்துச்செல்வி 

Thursday, 5 April 2018

காவேரியே! கேள்

தனிநாடு வேண்டாம்
தலைநாடாக மாறுவோம்!
தாங்கும் கீழ்நாடு என்று 
உதைக்கிறார்களோ!
நாம் இல்லையேல் 
நாடும் ஊனமே!
அடிமை என்று நினைத்தால் 
உதிரம் உதிர்த்து 
விண்ணிற்கு உரைப்போம் 
எங்கள் வீரத்தை 
மழலை என்று 
ஏளனம் செய்தால் 
மாவீரர்களாக மாறுவோம்
உழவன் என்று மிதித்தால் 
தலைநிமிர்ந்து சொல்வோம் 
உனக்கும் உணவளிப்பவர் 
நாங்கள் என்று!
காவேரியே! கேள் 
உன் சகோதரிகளைக் காத்து 
இயற்கை செழிப்புடன் 
வரவேற்போம் உன்னை!

- மூ.முத்துச்செல்வி 

பிழை ஒன்று

மெய் என்று
நினைத்தேன்
பொய் என்று
மாறியது...
பிழை ஒன்று
நான் செய்தேன்
பழி என்றானது
நல்லவை எல்லாம்
கெட்டவையானது..
நான் வைத்த
பாசங்கள் எல்லாம்
வேஷங்களானது..
எத்துணை செய்தேன்
நன்மைகள்
போற்றவில்லை
ஒரு தவறு செய்தேன்
குற்றம் சொல்கிறது
ஆயிரம் முறை....

Sunday, 1 April 2018

ஆசைப்படு!


தோல்வியின் போது 
வெற்றியின் மீது ஆசைப்படு!
வெற்றியின் போது 
பணிவின் மீது ஆசைப்படு!
பணிவின் போது 
சுயமரியாதை மீது ஆசைப்படு!
சுயமரியாதையின் போது 
பிறர் மரியாதை மீது ஆசைப்படு!
பிறர் மரியாதையின் போது 
அன்பின் மீது ஆசைப்படு!
அன்பின் போது 
உயிர்களின் மீது ஆசைப்படு!
உயிர்களின் போது 
பரிவின் மீது ஆசைப்படு!
பரிவின் போது 
இயற்கையின் மீது ஆசைப்படு!
இயற்கையின் போது 
செடிகளின் மீது ஆசைப்படு!
செடிகளின் போது 
வேர்கள் மீது ஆசைப்படு!
வேர்களின் போது 
தண்ணீர் மீது ஆசைப்படு!
தண்ணீரின் போது 
தாகத்தின் மீது ஆசைப்படு!
தாகத்தின் போது 
விவசாயத்தின் மீது ஆசைப்படு!

- மூ.முத்துச்செல்வி 

இயற்கையும் கல்வியும்

பூஞ்சோலை தோட்டத்து
ஊஞ்சலில் உலா வரும்
நெல் மணிகளுக்கிடையே
ஆரம்பமாகிறது தொடக்கக்கல்வி

ஏர்பூட்டும் கைகள்
ஆகாசத் தோழன்
அழகுற பின்னிய நட்பு
அறிவூட்டும் அதிசயக்கல்வி

ஓதங்களில் அசையும்
பாய்மர ஓடங்களில்
பல்லக்கில் செல்லும்
பசுமைக்கல்வி

இயற்கை அன்னை
இயற்றிய அழகிய நூல்
இயற்கையோடு இனைந்த
இனியக்கல்வி

தேடி தேடி திரியும் கால்கள்
சேற்றில் படரும் கைகள்
நீரோடை வண்ணத்தில்
முழுமையடையும் கல்வி

-

பணி நிறைவு

ஓடிய வலிகள் போதும்
ஒய்வெடுத்துக் கொள்!
கதை சொல்லி வளர்த்தாய்
இனி வரும் காலம்
எம் மகளோ! மகனோ!
கதை சொல்லும் குழந்தை
நீ தான்!
உன் புகழ் பாடும்
இம்மண்ணில்
உன் குழந்தைகள் நாங்கள்
வாழ்த்த வரவில்லை!
வாழ்த்து பெற வந்தோம்!

-மூ.முத்துச்செல்வி

Wednesday, 21 March 2018

எல்லாம் அவன் செயல்

எல்லாம் அவன் செயல்
என்றே உள்ளம் கொண்டு
நல்லாள் வழி
நடந்திடு மானிடனே!
நமை விதையாய் தூவிய
அவன் கைகள்
மழையாய்ப் பொழிந்து
நமை காத்திடுமே!
பயிராய் நாம் முளைத்து
மரமாய் நாம் வளர
ஒளியாய் அவன் நிற்பான்
அண்டங்கள் பயிலும்
அறிவை வளர்ப்போம்!
நெஞ்சங்கள் இணையும்
நல் உறவு வளர்ப்போம்!
தேசங்கள் தாண்டியும்
பாசங்கள் வளர்ப்போம்!

- மூ.முத்துச்செல்வி 

Tuesday, 20 March 2018

அவளே என் தோழி....


பிரம்மன் படைத்த
        பிறவி தோழி
பார்வையில்
        புன்னகை
உதட்டில் உருளும்
        உபசரிப்பு
பெண்மையின்
        மென்மை
ஆறுதல் தரும்
        ஆரவாரம்
அழகிய மனம்
        அவளே என் தோழி....

- மூ.முத்துச்செல்வி

மனித சக்தி







மண் மீது
மழைக் கொண்ட காதல்
மனித சக்தியால்
மாண்டுபோகிறது

-மூ.முத்துச்செல்வி

Friday, 9 March 2018

ஹைக்கூ


மயில் தோகையில் 
மடிந்த நிறங்கள் போல் 
அவள் கன்னங்களில் 
சிவப்புப் பருக்கள்.

- மூ.முத்துச்செல்வி  

என்னையும் வென்றது


மேவிய வாய் 
        தடவிடும் மான்கூட்டங்கள் 

பளிங்கு தேசத்தில் பற்கள் 
       அங்கொன்றும் இங்கொன்றும்

அன்னம் தன் அலகால் 
        செதுக்கிய 
                   தவழும் பாதங்கள்

சிறு கைப் பைக்குள் 
        சிக்கியது சுண்டுவிரல்

உலகையே வென்ற காதல் 
         என்னையும் வென்றது

மகளே உன் சிரிப்பில்!
         மழலையானேன் நான்! 

- மூ.முத்துச்செல்வி


Thursday, 8 March 2018

ஹைக்கூ


தன் கண்ணீர் 
உலகறிய 
இடியைத் துணை 
அழைத்ததோ மேகங்கள் 


- மூ.முத்துச்செல்வி

ஹைக்கூ


சுவாசிக்கும் 
சிசுவிடம் 
வாசிக்கச் சொல்கிறது 
இன்றைய கல்வி 


- மூ.முத்துச்செல்வி

Monday, 5 March 2018

சாதனைப் பெண்ணே


தமிழுக்கு ஆத்திசூடி 
தந்திட்ட ஔவை!
வேல் ஏந்திய 
வீர மங்கை 
வேலு நாச்சியார்!
வெள்ளையர்களை 
வெளியேற்றிய போர் மங்கை 
ஜான்சி ராணி!
தொழு நோயும் 
தொழுதிட்ட 
அன்னை தெரசா! 
வீண்மீன்களும் வியந்த 
கல்பனா சாவ்லா!
குரல் வலையில் 
கட்டிய சுப்புலட்சுமி! 
இவர்கள் 
பிறந்த மண்ணில் தான் 
சாதனைப் பெண்ணே 
நாமும் பிறந்தோம்.
இவர்களின் தலைமுறை நாம்
பாராட்டும் பாரதம்
நம் புகழ் பாடி...
பூமியும் வரையும்
நம் பாதசுவடை...
படைத்திடுவோம் புது வரலாறு....

- மூ.முத்துச்செல்வி 

எழுவாய் பெண்ணே!


எழுவாய் பெண்ணே!
புதியவை மலர 
பழையவை பாதுகாக்க 
எழுவாய் பெண்ணே
கைவிலங்கு உடைத்து 
கைமணம் பரப்பிட 
உன் கைகளின் வலிமையை 
உலகறியட்டும்!
வா பெண்ணே!
துணிவுகளின் அகராதி நீ!
துயரங்களின் ஆறுதல் நீ!
உன் கண்ணீரின் ரணம்
சிந்தியதால் 
பூமி தாயின் தேகம் சுடுகிறது. 
வழியும் கண்ணீரை 
துடைத்திடு!
வீறுகொண்டு தொடர்ந்திடு!
சாதனைகளின் வடிவங்கள் 
சுமந்தவள் நீ!
அன்னை நீ!
தோழி நீ!
வலிமை நீ!
அனைத்தும் நீயே!
உன் பாதச்சுவடுகள் 
உலகில் பரவிட 
உன் புகழ் 
உலகினர் செவிகளில் 
புத்துணர்வு படைத்திட 
வருவாய் பெண்ணே!

- மூ.முத்துச்செல்வி 


உயிர்களின் அன்னையே!

பூமி தாயே! 
நான் உதிர்த்த முத்தங்கள் 
உன் கன்னத்தை வருடியது! 
உன் முத்தங்கள் 
என் மகிழ்ச்சியை வருடுவது 
எப்போது? 

உன் கைகளில் 
முளைத்த கிளைகள் 
உயிர் மூச்சாய் 
என்னுள் வீச - தாயே! 
என் உயிர் நீ என்று 
உணர்ந்துகொண்டேன்! 

என் வலசை போகும் பாதங்கள் 
உன் அதிசய தேகங்களைக் 
காயம் செய்திடில் 
மன்னித்து புன்னகை புரிந்துவிடு! 

உன் களை 
நான் அகற்சி 
உன் புல் மடி 
தலை வைத்து தூங்கிடும் 
சுகம் மட்டும் போதும்! 

உயிர்களின் அன்னையே! 
என் வாழ்வில் 
காற்புள்ளியும் நீயே! 
முற்றுப்புள்ளியும் நீயே! 

- மூ.முத்துச்செல்வி

Sunday, 4 March 2018

அப்பா


தாயின் அன்பில் 

பெருமை கொண்ட 
வரிகள் - ஏன் 
உன் அன்பை 
போற்றவில்லை?. 

கருவில் சுமந்தவளைப் 
பாராட்டிய வரிகள் - ஏன் 
உன் வாழ்நாள் சுமையை 
எண்ணவில்லை?. 

அன்னையின் தியாகத்தைப் பாட 
ஆயிரம் வரி தேடியக் கவிதைகள்- ஏன் 
உன்னை பாட ஒரு வரியும் 
தேடவில்லை?.... 

அவள் தந்த உடல் 
நீ தந்த உயிர் - ஏன் 
உன்னை புகழ மறந்தது? 

ஒருவேளை 
அன்னை போல 
எளிதில் ஏமாறுவாய் என்றால் 
என் கவிதைகளும் 
உன் புகழை பாடி இருக்குமோ! 

-மூ.முத்துச்செல்வி


Thursday, 1 March 2018

இன்றைய நிலை


தேவையற்றதன் வரவேற்பு 
தேவையானவை வெளிநடப்பு! 

விதைகள் முளைக்கும் முன் 
கிளைகள் வளர துடிக்கிறது! 

இரவெல்லாம் பகல் போலும் 
பகலெல்லாம் இரவு போலும்! 

ஆறாம் விரல் தேடுதல் 
ஐந்து விரல்களின் தேய்மானம்! 

வசைபாடும் ஆயிரம் பற்கள் 
வழிகாட்டுதல் இல்லை 

வெற்றிகள் வேண்டும் 
தோல்விகளில் மரணம்! 

- மூ.முத்துச்செல்வி

Tuesday, 27 February 2018

எங்கே மனிதம்


உன் இனவெறிக்கு
பழி நாங்கள்
உன் போட்டிக்கு
எங்கள் உயிர் பந்தயங்களா?
பள்ளி சுமை சுமந்த 
முதுகுகள் 
வெடிகுண்டுகளின்
துளைகளை சுமக்கிறதே!

இறைவா!
குழந்தைகளைக் கொல்லும்
இம்மனிதர்களை
உன்னுடன் எடுத்துக்கொள்
எங்கள் கண்ணீரை
துடைக்க கரம் நீட்டு!

வளங்களை அடைய
வளரும் தலைமுறை
வாழ்வை சிதைப்பது
சரியோ!

மிருகங்கள் இரக்கம்கூட
இல்லா மனிதனிடம்
மனிதத்தை தேடுவது
பிழையோ!

- மூ.முத்துச்செல்வி




Wednesday, 21 February 2018

எங்கே தேடுவது மனிதத்தை இங்கே!


வியர்வை துளியில் இரத்தம்
உறிய துடிக்கும்
கூட்டம்....

போராட்டம் பல செய்தும்
பார்க்காத நாட்காட்டி

தோலுரித்த எலும்புகளாய்
அழையவிட துடிக்கும்
பேராசை பணங்கள்

சுவாசிக்கும் காற்றில் கூட
இல்லை
ஒரு துளி அமிர்தம்.

உப்பு காற்றில்
சிலிர்க்கும் தோலுக்கு
கோடியில் விஷம் ஏறிய
ஆலைகள்.

எங்கே தேடுவது
மனிதத்தை இங்கே!

- மூ.முத்துச்செல்வி



Saturday, 17 February 2018

பூமிதனில் எல்லாம் பொய்யாகுக!


காவேரி! காவேரி!
களிகொண்ட கானங்கள்
பொய்யாகுக!

ஆவணங்கள், ஆளுமை 
அரசுகள், அரசியல் 
எல்லாம் பொய்யாகுக!

ஊழல், லஞ்சம்
கொடுத்த கைகள்
வாங்கிய கைகள் 
பொய்யாகுக!

இலவசம்! இலவசம்!
போலி ஆட்சிக்கு 
வழி கொடுத்த மக்களும்
பொய்யாகுக!

காடே பொய்யாகுக!
நாடே பொய்யாகுக!
விளைநிலமே பொய்யாகுக!
மழையே பொய்யாகுக! 

வஞ்சிக்கப்படட விவசாயமே 
நீயும் பொய்யாகுக!
நானும் பொய்யாகுக!
பூமிதனில் எல்லாம் பொய்யாகுக!

- மூ.முத்துச்செல்வி 

நிறுத்துங்கள்



கானம் பாடி மகிழும் 
குயில்களே! உங்கள் 
பாடலை நிறுத்துங்கள் 
எம் விவசாயி அழுகிறான்... 

வருடும் காற்றே! 
தென்றலை நிறுத்துங்கள் 
எம் விவசாயி கண்ணீரிலாவது 
விதை முளைக்கட்டும்... 

சுடும் சூரியனே! 
சுடுவதை நிறுத்துங்கள் 
எம் விவசாயி கண்ணீர் 
சேமிக்கப்படடும்... 

எமை படைத்த இறையே! 
உம் படைப்பை நிறுத்துங்கள் 
உணவளிக்க விவசாயி 
இங்கில்லை... 

- மூ.முத்துச்செல்வி

Wednesday, 14 February 2018

உன் தாள் பணிகிறேன்


சிலம்பின் வீரத்தில் 
வீர மேகலை 
தூவிய வீரம்!! 

கம்பன் கட்டுத்தறிக்கும் 
கவி பாடச் செய்தவள்! 

மேல்,கீழ் கணக்குகளில் 
அறம், புறம் ஓதியவள்! 
உயிர்நெறி ஊட்டியவள்! 

பாரதி புதுமை 
தாசன் எழுச்சி 
ஒருசேரப் பெற்றவள்! 

ஈரடிக் குறளில் 
வாழ்க்கைநெறி 
போதித்தவள்! 

அன்புக்கு தனி 
அகராதி சேர்த்தவள்! 

என்னையும் கவி பாடச் 
செய்த அன்னையே 
உன் தாள் பணிகிறேன்! 

- மூ.முத்துச்செல்வி

அழகு மௌனங்கள்



அசைபோடும் ஞாபகம் 
அதில் அசைந்தாடும் 
மௌனங்கள்! 

அழும் போது 
உடன் வரும் 
மௌனங்கள்! 

தலைவன் பிரிவில் 
தலைவி சிந்திடும் 
மௌனங்கள்! 

தலைவனைக் கண்டதும் 
தலைவி நாணத்தில் வீசும் 
மௌனங்கள்! 

காதலை சொல்லும் 
காதலர்கள் உதிர்க்கும் 
மௌனங்கள்! 

ஏக்கத்திலும், பாசத்திலும் 
கோவத்திலும், நாணத்திலும் 
ஊடலிலும், பிரிவிலும் 
சிரிப்பிலும், சோகத்திலும் 
உடன் பயணிக்கும் 
மௌனமும் ஓர் அழகுதான்! 

- மூ.முத்துச்செல்வி

Tuesday, 23 January 2018

முதுமை வந்துவிட்டது


வேட்க்கை தீர்ந்ததும் 
யாக்கை புரிந்ததும்
காக்கை அழகானது 

கொள்கை தளர்ந்தது 
கேளிக்கை மிகுந்தது
வாழ்க்கை தெரிந்தது 

இருந்தும் 

கயிறிட துடிக்குது 
கால் விரல்கள்...

மூக்கு கண்ணாடி தேடுது 
கை விரல்கள் 

அவனோ! அவளோ! 
கவனிப்பதில்லை - இருந்தும் 
புலம்பும் உதடுகள்...

கதைகள் பல கேட்க 
துடிக்குது செவிகள் 

கதை சொல்லத்தான் 
இல்லை உறவுகள் 

ஓடி ஓடி 
முதுமை வந்தது 
ஓய்வில் புரிகிறது 
தனிமையும்!!!

- மூ.முத்துச்செல்வி  

Saturday, 13 January 2018

பொங்கலோ பொங்கல்


மஞ்சள் குழை
மயக்கத்தில் 
மந்திர புன்னகை 
மண்பானை பொங்கல் 
பொங்குதம்மா!!!

மார்கழி பிரசவத்தில்
தைப் பிறந்ததம்மா
தையல் நாயகி
அருள் கிடைத்தம்மா!!!

ஆடிப்பட்டம் தேடி
விதைத்த விதை
பக்குவமாய் 
அறுவடை ஆனதம்மா !!

உழவன் வியர்வை கண்டு
கொதித்த சூரியனும்
அவன் சிரிப்பில்
பிரகாசிக்குமம்மா!!!

கூடி மகிழ்ந்து
மதம், இனம் மறந்து
பொங்கட்டும் பொங்கலம்மா!!!

- மூ.முத்துச்செல்வி


சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...