Thursday, 26 October 2017

பெண்ணும் ஆணும்

பெண்ணும் ஆணும்
மலைகளின் செறிவில் இருந்து 
பெற்ற வீரம் ஆண் எனில் 
மலைகளையும் பாசத்தினால் கட்டிய நீர்வீழ்ச்சி 
மல்லிகை மனம் பொருந்தியவள் பெண் 
பெண்ணும் ஆணும் உடம்பில் சமமில்லை 
ஆனால் உள்ளத்தால் சமம்தான் 
பெண்ணிற்கென்று ஒரு சுதந்திர உலகம் உண்டு 
ஆணுக்கென்று ஒரு சுதந்திர உலகம் உண்டு 
ஆணின் சுதந்திரத்தை பாதிக்காத பெண்ணும் 
பெண்ணின் சுதந்திரத்தை பாதிக்காத ஆணும் 
என்றும் சமமே இந்த உலகில்...... 
பெண்ணை சமாக நினைக்க வேண்டும் என்றால் 
ஆணுக்குள் பெண்மை மலர வேண்டும் 
உள்ளத்தால் மட்டுமே சமத்துவம் மலரும் 
சமத்துவம் மலர்ந்தால் பெண்மையும் கவுரப்படும்!!! 
பெண் கொடுமையும் தடைபடும்!. 
இனி வரும் தலைமுறைக்கு போதியுங்கள் 
பெண்மையில் மீதியே ஆண்மை என்று 
ஆண் என்றும் பெண்ணின் மறுபிறவி என்று 
ஆணும், பெண்ணுக்கும் உணர்ச்சிகள் ஒன்றென்று 
அ என்ற குறில் இருந்துதான் 
ஆ என்ற நெடில் தோன்றியது என்று 
பெண்ணை மதித்து சமமாக பார்த்து 
மலரட்டும் அடுத்த தலைமுறை 

-மூ.முத்துச்செல்வி

Thursday, 19 October 2017

போ நீ போ


போ நீ போ

உன்னிடம் சொல்லிய வார்த்தை 
அதை காக்க - என் யுகம் 
பாதுகாத்தேன்... 
காமம் சில சமயம் எட்டிப்பார்த்தும் 
காதல் பூ மட்டும் உதிரவில்லை... 
கோபங்கள் இருந்தும் 
தாபங்கள் மறந்ததில்லை 
விரகங்கள் அவ்வப்போது நிகழ்ந்தும் 
பாசத்திற்கு குறைவில்லை 
சிறு புழு போல் சிலநேரம் குலைந்தும் 
கிளியாய் சில நேரம் கூண்டில் அடைந்தும் 
குருவியாய் பல நேரம் திரிந்தும் 
காதல் வளர்ந்தது.. 
தோள்கள் வருடலை தேட 
மனம் காதலில் திளைத்திட 
மடிகள் தலையணை ஆகிட 
காதல் வலம் வந்தது. 
அன்பு குறையவில்லை 
பாசம் மாறவில்லை 
நேசம் மறக்கவில்லை 
இருந்தும் 
பிரிவு வந்தது எப்போது?? 
சண்டைகள் பல வந்தும் 
சமாதானம் தேடிய உதடுகள் 
இன்று 
மௌனம் தரிப்பது ஏன்?? 
கண்களை மோதி கொண்ட காதல் 
இன்று 
நேர் நோக்க மறுப்பது ஏன்?? 
துணையாய் இருந்த மனம் 
தனிமை வாசலில் விட்டது ஏன்?? 
போ காதலே போ 
விடைகள் மட்டும் தந்துவிடு 
விடை பெற்று செல்கிறேன். 

-மூ.முத்துச்செல்வி


Sunday, 15 October 2017

உன் நினைவு காயங்கள்



பெரு அலைகள் 
அதில் தத்தளிக்கும் 
சிறு ஓடம் போல் - காதலே 
உன் நினைவுகள்....... 

கூந்தல் கோதிட்ட விரல்கள் 
நகக்கண்களை குத்திக்கொண்டு... 

பேனா முனை கிழித்திட்ட காகிதம் போல் 
குருதி குறைந்து எழுதி மாய்கிறது 
என் கவிதைகள்.... 

உன் விழிகளில் பாய்ந்த 
என் காதல் அம்புகள் - இன்று 
என்னை மோதி மோதி சாகிறது... 

சிரிப்பின் சுவரம் குறைந்து 
மௌன மொழியில் பேசியும் 
என் நாட்கள். 

காயம் கண்ட இதயம் 
இருந்தும் 
உன்னை மட்டும் மறப்பதில்லை.... 

உன் பாதைகள் 
என் விழி அறைகளாய் 
உன் வருகை மட்டும் பதிவு செய்து... 

கடல் அலைகள் அடியில் உள்ள 
நிலவின் பிம்பம் போல் 
யாரும் அறியாமல் போகிறது 
என் சோகங்கள்.... 

ஊசியில் நுழையும் நூல் போல் 
என் மனதில் மெல்ல நுழையும் 
உன் நினைவுகள் 
என் காயம் மட்டும் தைக்கப்படாமல்... 

என்னோடு வந்துவிடு காதலே!!! 
மருந்தாக அல்ல - என் 
ஆரோக்கியமாய்.... 

-மூ.முத்துச்செல்வி

Friday, 13 October 2017

முதுமை தெய்வமே


முதுமை தெய்வமே

கருவறை சுகம் தந்து 
கரும்பலகை அறிவு தந்து 
கருணை தந்த - என் பீடமே 
வீதியில் விட்டிட்ட பாவியானேன் 
என் புன்னகை அனைத்தும் 
கண்ணீராய் உன் முன் 
காயங்கள் உண்டெனில் 
மன்னித்துவிடு!! 
மறந்துவிடாதே!! 

இளமையில் வளமை தந்து 
இதயத்தில் குடில் தந்து 
இன்றளவும் நேசம் தந்து 
இன்பம் தந்த - என் இறையே 
உன்னை தாங்க தவறினேன் 
நேசம் தாங்கிய இதயம் 
நெருடலாய் உன் முன் 
பாசம் உண்டெனில் 
நேசித்துவிடு!! 
வெறுத்துவிடாதே!! 

புன்னகை கண்டிப்பு தந்து 
புத்துயிர் தந்து 
புதுமை தந்து 
புகழ் தந்த - என் புத்தகமே 
உன் முதுமை முக வரிகள் மறந்தேன் 
நீ தந்த தேக குருதிகள் 
பன்னீர் துளிகளாய் உன் பாதத்தில் 
இரக்கம் உண்டெனில் 
குணப்படுத்திவிடு!! 
வதைத்துவிடாதே!! 

என் வசந்தங்கள் 
உன் வசந்தமாய் 
உன் முதுமை மட்டும் மறந்த 
என் முட்டாள் தனத்தை 
என் கடவுளே நீ மன்னிப்பாயா?? 
பாதியில் மாறிய என் பாவி மனதை 
கை பிடித்து கரை சேர்ப்பாயா?? 
உனக்கும் இந்நிலைமை வரும் சபித்திடாதே 
உன்னுள் உள்ள என்னை மன்னித்துவிடு 
என் இதய தெய்வமே!! 

- மூ.முத்துச்செல்வி

Tuesday, 10 October 2017

தனிமை எனக்கொன்றும் புதிதில்லை




தனிமை எனக்கொன்றும் புதிதில்லை 
இருந்தும் - உறவே 
உன் பிரிவு எனக்கு புதிதே!...... 

பிரிவில் நிலைக்கொள்கிறது 
காதலே 
நம் காதல்...... 

தனிமை எனக்கொன்றும் பயமில்லை 
இருந்தும் - உயிரே 
நீயில்லா வெறுமை பயமே!...... 

பிம்ப துகளே நீ சிந்திய 
பிம்பத்தில் தெரிகிறது 
என் பிம்பம்..... 

தனிமை எனக்கொன்றும் சுகமில்லை 
இருந்தும் - பரிவே 
உன் நினைவுகள் சுகமே!..... 

தனிமை சுகம் ரனமாய் தாக்க 
அன்பே! 
கூட்டத்திலும் தனித்திருக்கிறேன்...... 

தனிமை எனக்கொன்றும் வலியல்ல 
இருந்தும் - மெய்யே 
உன் வருடல் தரா தனிமை வலியே!...... 

என் குழந்தை மனமும் அழுகிறது 
பசிக்காக அல்ல - உன் 
பாசத்துக்காக....... 

தனிமை எனக்கொன்றும் பாரமல்ல 
இருந்தும் - அழகே 
உன் வரவுக்காக காத்திருக்கும் நாட்கள் பாரமே!.... 

விழித்திருந்தும் விடியவில்லை 
என் இரவு மட்டும்...... 

இப்பொழுதும் சொல்கிறேன் 
தனிமை எனக்கொன்றும் புதிதில்லை 
இருந்தும் புதிதே!. 

-மூ.முத்துச்செல்வி

குழந்தை தொழிலாளி


குழந்தை தொழிலாளி

கருவறையின் சுகம் மட்டும் 
கண்டாய் வாழ்வில் 
கல்லறைக்கூட கலங்கும் - உன் 
காய்ச்சிய கை கண்டு....... 

நெருப்பில் சுட்ட இரும்பாய் 
தினம் தினம் அகதியாய் 
கனவுகள் பல சுமந்து...... 
கார்மேக கண்களில் கண்ணீரை சுமந்து 
செம்பட்டை முடியுடன் வீதியில்......... 

ஓலம் இடும் ஈக்கள் கூட 
தன் சிறகை விரித்து சுதந்திரமாய் பூமியில் 
சிறகொடிந்த பறவை நீ 
சிறகிரிந்தும் பறக்க இயலவில்லை...... 

செங்கற்கள் இடையில் சிக்கிய 
செந்தாமரை - வழிந்து ஓடும் 
உன் குருதி அதில் சிவந்த 
செங்கற்கள்...... 

அய்யன் பட்ட கடன் தீர்க்க 
அடகுவைத்தாய் உன் இளமையை 
தியாகியாய் நீ சிந்தும் இரத்தம் 
பறைசாற்றும் உன் அன்னையின் துயரை........ 

மனிதம் மலர்கிறது!!!!!! - நீ 
ஒட்டிய சுவரொட்டி வேதனையில் 
அவையும் கிழிந்தது உன் நிலை கண்டு...... 

-மூ.முத்துச்செல்வி 
----------------------------------------------------------------------------------------------- 

குழந்தை தொழிலாளி இல்லா 
தேசம் மலர இக் கவிதை சமர்ப்பணம்

அழகு மொழியாள்


வலிக்கொடுத்து வந்தேன் தாங்கினாள்..... 
என் வலியல்லாது 
என் இதயத்தின் வலியையும் புரிந்தவள்....... 

வாழ வகை செய்தவள் 
வாழ்கையை இழந்தாளும் 
வாழ்த்துகிறாள் என்னை...... 

வீழ்கின்ற இடமெல்லாம் 
விழி நீரை துடைத்தவள் 
வாடிய கண்களுடன் - என் 
கண்ணீரை துடைத்தவள்...... 

வாழ்க்கை கற்றது பல 
அவையும் 
அவள் சொல்லிய மொழியே!!.... 

அவள் பார்க்கின்ற பார்வை 
பால்வீதியாய் பலமுறை 
பாசத்தின் அடையாளம்..... 

தொண்டை சோறும் செரிக்கும் 
அவளின் அமுத கைகளில் 
முகமெல்லாம் மல்லிக்கை பூத்தவள் 
உலகின் அழகை கொண்டவள்....... 
அவள்தான் என் அன்னை........ 

-மூ.முத்துச்செல்வி

என் முன்னாள் காதலி


இடிகளின் இச்சையில் உடைந்திட்ட 
பனை மரம் போல் - உடைந்த 
என் நெஞ்சம் - மறக்க செய்கிறது 
குழந்தை சிரிப்புப் போல் மலர்கிற 
உன் நினைவு சுமைகள்..... 

ஆர்ப்பரிக்கும் அலைக்கடலை ஆரவாரம் செய்யும் 
அந்தி மாலை பொழுது போல் 
அழகிய காட்சிகள் நிறைந்த என் உலகம் 
நிறங்களற்ற காட்சியாய் என்னை மட்டும் சுமந்து செல்கிறது..... 
நீ கொண்ட பிரிவால்..... 

யாரும் எனை பார்க்கவிலைல - ஆனால் 
உலகமே என்னிடம் எதோ சொல்வது போல் 
ஒரு மாயை என்னுள்.... உன் 
சோகங்களை உதிர்த்து செல்வதால்..... 

தனியாக பேசுவதால் பைத்தியம் என்கிறது 
அவர்களுக்கு புரியவில்லை 
உன்னுடன் உரையாடுகிறேன் என்று!!!!! 

என் எண்ணமாக, செயலாக இருந்தாய் - இன்று 
என்னோடு நீ இல்லை 
எங்கிருந்தாலும் நலமாக வாழ்வாய் 
என் முன்னாள் காதலியே!!!!! 

-மூ.முத்துச்செல்வி

மேக விடு தூது


மேக விடு தூது


உன் கைகளை பிடித்து வெகுதூரம் நடந்திடவில்லை 
மழை மேகங்களில் உன் தோள் உரசி சரிந்ததுமில்லை 
நான் காணும் அனைவரும் காதல் மழையில் 
கைகள் கோர்த்து நடந்திட - நான் மட்டும் தனிமையில் 
மழை மேகங்களில் குடையின் கைகளை கோர்த்து நடந்திட்டேன்! 
விடியும் பொழுதெல்லாம் உன் முகம் பார்க்கவில்லை 
உன் விடுமுறை வரவை மட்டும் நோக்கி விடியும் விழிகள் 
பூக்களை கோர்த்து என் கூந்தலில் நீ சூட்ட 
கூந்தலின் கருமையும் உன் வரவை நோக்கி..... 
நான் பேசும் கொஞ்சலும் நீ பேசும் மென்மையும் 
கடிதங்களின் வார்த்தைகளில் மட்டும் விரிகிறது.... 
மேகத்திடம் தூது செல்ல மனமும் மறந்ததில்லை 
உன் தோளில் நம் குழந்தை உறங்கிடவில்லை 
உன் மார்பில் நாங்கள் இருவரும் தவழ்ந்திடவுமில்லை 
ஆனாலும் உன் மார்பயும், தோளையும் சூழ்ந்தது 
நீ செய்யும் கடமை எங்களை காக்க.... 
ஏக்கங்கள் நிறைந்தாலும் தூக்கங்கள் தொலைந்தாலும் 
உன் மடிமீது தவழும் நாள்கள் வரவை எண்ண தவறியதுமில்லை 
மேகமே உன் மழையுடன் உரைத்திடு என் அன்பானவனிடம் 
என் உயிர் சுமர்ந்த உன் வருகைக்கு காத்திருக்கிறேன் என்று.... 
காதலனாய் நீ இருந்திடவில்லை - ஆனாலும் 
நல் காவலனாய் எங்கள் பாதுகாவலனாய் இம்மண்ணில்
உலக மக்கள் மனதில் பூக்கள் என்ற அன்பு மலர்ந்தால் 
நீயும் நானும் வாழ்வோம் மற்ற காதலரை போல் உலகில்.... 
இதையும் கூறிவிட்டு போ மேகமே! 
இவுலக மக்களுக்கு போர்க்களங்கள் வேண்டாமென்று....... 

----------------------------------------------------------------------------------------------- 

ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு சமர்ப்பணம்........ 

- முத்து துரை

என் தேசமே


நாடகங்கள் மேடை ஏற 
நாட்டிய பாவைகள் வழி 
தகுதிகள் மறந்திட, மறுத்திட 
தடைகள் நிரம்பிட உருவாக்கிய 
தண்ணீரும் கையேந்த - செந்நீர் 
சிந்தியும் வேடிக்கை கண்கள் வட்டமிட 
அழுக்குரல் ஓலங்கள் செவி அடைத்தும் 
செவிடாய் போன செவிகள் பல 
காதல் கீதங்கள் மட்டும் கேட்ட 
காதல் பறவைகளையும் எழுப்பிய சத்தம் 
போராட்டங்கள் கண்டு 
போர்களமாய் மாறிய தேசம் 
மனங்களில் மதத்தை திணிக்கும் மூடரே 
கொடிகளில் கூட ஒற்றுமை இருக்கிறது 
பச்சை தாங்கித்தான் விரிகிறது, பறக்கிறது 
வெள்ளையும் காவியும் மறக்காதே! 
பசுமை இருப்பின் படைக்கலாம் 
தற்கொலை இல்லா விவசாயத்தை 
பூக்கள் தூக்கும் பிஞ்சி விரல் 
பாரம் சுமக்கும் அவலம் 
நெஞ்சம் பொறுக்கவில்லை - பாரதியே 
மீண்டும் வந்து விடு 
உன் எழுத்தில் உதிக்கட்டும் 
புதிய தேசம்.... 

-மூ.முத்துச்செல்வி

அவள் பெயர




நான் பிறக்கும் போது என்னுடன் பிறந்தவள்... 
நான் தவழும் போது என்னுடன் தவழ்ந்து வளர்ந்தவள் 
ஆனால்.... 
நான் பயிலும் போது அவளை கண்டுகொள்ளவில்லை 
நான் வளர்ந்தேன் அவள் தந்த அறிவை வைத்து-அப்போதும் 
அவளிடம் இருந்த நான் மாறவில்லை... 
ஆனால் என்னிடம் இருந்த அவள் மாறிவிட்டால்... 
நான் இன்னொருவளை புரிந்துக் கொள்ள 
எனக்கு உதவியவள்.... 
அப்போது தேவைபட்டவள்..... 
அப்போதும் என்னை உயர்த்தியவள்.... 
இன்று என்னிடம் இல்லை.... 
ஆனால் அவளிடம் நான் இருக்கிறேன்... 
நான் அவளுக்கு தேவையில்லை என்றபோதும்... 
என்னை மறகாதவலாய் இருந்தால்... 
நான் அழும் போது என்னுடன் அழுதவள்... 
என் துன்பத்தில் அவள் வரிகள் தேவைப் பட்டன... 
நான் அவளை மறக்க வில்லை என்ற நம்பிக்கையில் இருப்பவள்... 
நான் வளர்ப்பேன் என்ற நம்பிக்கையில் இருக்கும் 
என் உயிர் மெய்யானவள் பெயர்தான்... 
தமிழ்................ 

-மூ.முத்துச்செல்வி

இதுதான்

இதுதான்
விவேகமாய் வீறுடன் 
விதையாய் எழு என்றான் 
அன்றைய கவிஞனும், சமூகமும்..... 

விடாமல் குடி என்கிறது 
இன்றைய சமூகம்...... 

தண்ணீர்! தண்ணீர்! 
என்கிறது ஒரு தேசம் 
அதன் தேவைக்காய்.... 

நீ குடி குடி! 
என்கிறது ஒரு தேசம் 
அதன் கஜானா கட்ட.... 

இளம் வயதில் 
இயலாமை, துன்பத்தை வெளிபடுத்த 
குடி தான் தீர்வு 
சித்தரிக்கிறது திரையோவியம்!! 

தன் மகிழ்ச்சியை வெளிபடுத்த 
உயர்தர, பளிச்சிடும் விளக்குடன் கூடிய 
விருந்திற்கு செல் என்கிறது ஊடகம்!! 

இளம் வயதினர்க்கு 
இப்படியா வழிகாட்ட வேண்டும் 

இதற்க்கு மட்டும் ஏன் இல்லை 
சட்டங்களும், கட்டுபாடும்....... 

இதுமட்டும் தான் உலகமா??? 

-மூ.முத்துச்செல்வி

விவசாயி

விவசாயி


விதைகள் பல விதைக்க 
பயிர்கள் நான் வளர்க்க 
செடிகள் அழகை ரசிக்க 
மரங்களும் வளர -நானும் 
விவசாயி என்ற கர்வம் வந்தது..... 

விதைத்த விதைகள் வீரிட்டு வளர்ந்தன... 
செடிகொடிகளோ எனைக்காண தலைகாட்டின 
மரங்கள் மண்ணை முட்டி வளர்ந்தன... 
ஒரு சில ஏமாற்றியபோதும் -என் உள்ளம் 
நீயும் விவசாயி என்றது.... 

நான் செய்யும் 
சின்னசிறு விவசாயம் என்னை 
எனக்கே கற்றுக்கொடுகிறது... 

விவசாயி போல் 
அனுபவம் இல்லை..... 
பயிர்களின் பக்குவம் தெரியவில்லை 
ஆனால் 
ஏதோ விதைத்தேன்.... 

ஓவ்வொரு பயிரும் வளரும்போது 
விவசாயி அடைந்திட்ட ஆனந்தம் என்னுள்... 
நானும் விவசாயி என்ற பரவசம் மட்டும் 
என் மனதுள்.... 

நான் பட்டதாரி என்பதைவிட 
விவசாயி என்றே சொல்ல 
மனம் ஆசைப்படுகிறது!!... 

-மூ.முத்துச்செல்வி

முதலுதவி

முதலுதவி


அவளை கண்ட நொடியில் 
என்னுள் ஏற்பட்ட விபத்திற்கு 
இன்றளவும் இல்லை முதலுதவி.... 

-மூ.முத்துச்செல்வி

மழலை

மழலை


உன் ஒற்றை சிரிப்பில் 
உடைந்தன என் துன்பங்கள் 

நீ அழுகின்ற அழகு 
கவிஞரின் வரிகளில் உதிர்ந்த 
இசையாய் தோன்றுகிறது..... 

நீ கொஞ்சும் சினுங்கல் கூட 
இறைவனின் அதிசியங்களில் ஒன்று.... 

உன் ஒற்றை அழகு 
உலகத்தின் அழகைவிட சிறந்தது... 

மழலை மொழியில் பேச 
மழலையாய் மாறிய என் மனம்..... 

-மூ.முத்துச்செல்வி

பெண் தெய்வம்

பெண் தெய்வம்


கருவில் பெற்று 
கல்லரை வரை சுமந்தவள் 
காணமல் போனால் முதியோர் இல்லத்தில்.... 
ஆண்டுகள் நீ பயில 
ஆகாரம் மறந்தவள் 
ஆயிரம் வேதனையை சுமந்தவள் 
ஆகாமல் போனால் -உன் 
ஆகாய வீட்டில் 
தன் சிரிப்பை மறந்தவள் 
உன் சிரிப்பை கண்டு 
தன் கவலை மறந்தவள் 
தேகம் சுருங்கி 
சோகம் ஏந்தி 
வாழ்க்கை வீதியில் 
வாடி போனவள்...... 

-மூ.முத்துச்செல்வி

நிலா




எத்தனை முறை கரைந்தாலும் 
அழகு குறையாதவள் 
பிறை நிலா!!! 

-மூ.முத்துச்செல்வி

சோளக்காட்டு பொம்மை



சுடுவானின் சூரியன் 
சுடும் நடுவெளியில் நடுமரமாய்.... 

கருவாச்சியை விரட்ட 
அருவாச்சியாய் வைக்கோலுடன்.... 

பானை மண்டையுடன் 
பகட்டு தோற்றம்.... 

ஜோடி இல்லா நாயகனாய் 
தனி நடனம்.... 

எந்த பாவி பெற்ற சாபமோ! 
கைகள் விரிதிட்டபடி 
பகலும் இரவும்.... 

-மூ.முத்துச்செல்வி

திரும்ப கிடைக்கா நாட்கள்



கண்மாயில் கால் 

நனைத்து கேலி 
செய்த நாட்கள்... 



ஆற்று மணலில் 
ஒய்யார இருக்கையில் 
ஓலம் இட்ட நாட்கள் 



மழை வெள்ளத்தில் 
படகு போட்டி 
வைத்திட்ட நாட்கள்... 



பனை பழத்தில் 
பகுசாய் வண்டி ஒட்டி 
சண்டையிட்ட நாட்கள்... 



கண்கட்டி 
தெரு வீதியில் 
ஓடிட்ட நாட்கள்.... 



பட்டம் பறக்க 
வானம் சொந்தமாகிய 
நாட்கள்... 



கொடை பலூன் 
பத்து அடி 
வாங்கிய நாட்கள்... 



அழகு கண்ணாடி 
அணிந்து வீதியில் 
சண்டியராய் 
அலைந்திட்ட நாட்கள்... 



திரும்பி பார்க்க 
துடிக்கும் நாட்கள் 
இக்கால பிள்ளைக்கு 
கிடைத்திடா நாட்கள்..... 



-மூ.முத்துச்செல்வி

Monday, 9 October 2017

நினைவுகள் நிலையில்லா மனம்



முள்ளின் மீது 
வரைந்திட்ட 
சேலை வடிவமைப்பு 
கந்தலான என் காதல்.... 

வார்ப்புகளில் வடிந்தோடும் 
தங்க கொப்பளிப்பு 
உன் நினைவில் 
என் மனம்.... 

நதிகள் எதிர்கொள்ளா 
காகித ஓடம் 
நட்ட நடு மழையில் 
நாசமாய் போன 
என் காதல்... 

உணர்வற்ற சடமாய் 
உயிருள்ள பிணமாய் 
உருகிதான் போனது 
உருக்குலைந்த மனம்... 

ஓரப்பர்வையில் விழ்ந்திட்டு 
ஓரமாய் 
ஒப்பாரி வைக்கிறது 
ஒற்றை மனம்... 

உரசும் காற்று கூட 
உறையும் குளிராய் 
உன் நினைவில் 
உடைந்திட்ட மனம்.... 

சீப்பின் பற்கள் கூட 
கிழிக்கின்றது தேகத்தை 
தனிமை தரும் வலியால்... 

சல சல என வீசும் காற்றும் 
சல்லடை ஆனது 
சர சர என வரும் நினைவால்... 

மழை பெய்யும் வேளை 
கலைந்திட்ட மேகமாய் 
அவளின்றி கலையும் 
என் நேசம்.... 

-மூ.முத்துச்செல்வி

என் மறுபிறவியும் நீயே வேண்டும்


நிழலாய் உன் நிழலாய் 
தொடர்வேன் உன்னை.... 

மழையாய் சிறு மழையாய் 
பொழிவேன் உன்னில்..... 

மலராய் சிறு மலராய் 
மலர்வேன் உன் கண்ணில்.... 

நிஜமாய் நிஜமாய் 
உன் அன்பு ஒன்றே போதும் 
என் வாழ்வில்..... 

காற்றாய் வீசும் காற்றாய் 
உன்னுள் விழுவேன்..... 

தாயே என் தாயே! 
உன் மடி தரும் சுகம் 
வேண்டும் 
என் ஏழு பிறவியும்....... 

உன்னை உன்னை 
பிரிய என்னுள் நிலநடுக்கம் 
வேண்டாம் வேண்டாம் 
இந்த பிரிவு.... 

என் வாழ்வில் 
வேண்டாம் இன்னோரு 
பந்தம்.... 
மகளாய் உன் மகளாய் 
என் வாழ்நாள் வரை 
இருக்க வேண்டும்..... 

-மூ.முத்துச்செல்வி

உள்ளும் புறமும் நீ




வெண்ணிலவாய் வீதியில் 
வட்டமிட்டு சென்றாய்.... 

வெள்ளந்தியாய் உள் 
இருப்பதாய் சொல்லாமல் 
உன் வரவை ரசித்து 
நின்றேன்..... 

துள்ளும் மீனாய் 
கடை வீதியில் 
அவள்..... 

தத்தளிக்கும் 
தண்ணீரற்ற பறவையாய் 
நான்..... 

மண்ணிலிருந்து 
எழுந்த விதையாய் 
உன்னிலிருந்து 
விளைந்த மரமாய் 
உன் நினைவுகள்.... 

அலையாய் 
அசைந்தோடும் 
உன் நினைவு கவிதைகள்..... 

-மூ.முத்துச்செல்வி

ஒரு தலை காதல்


லட்ச முட்களின் - இரகமற்ற 
வேதனைகளாய் எழுதபடா 
என் ஒரு தலை காதல்!!...... 

சொல்லி தொலையா 
என் சொல்லா காதல்!!...... 

எழுதியும் உன் முகவரி 
சேரா என் ஆயிரம் ஆயிரம் 
கடித கவிதை காதல்!!....... 

உன் கன்னக்குழியில் 
எழுந்திடா என் ஆசை 
முத்த காதல்!!...... 

என் ஒற்றை 
காதல்!!...... 

-மூ.முத்துச்செல்வி

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...