Sunday, 26 November 2017

அறம்

அறம்


தாயின் கருவறை 
கண்ட என் தேகம்! 
கண்ணீரிலும் ஈரமில்லா 
பூமி தாய் கால் மடியில் 
அகப்பட்டு... 

உன் கண்ணீரை 
உறிஞ்சிய மூடன் 
உன் மேனி காயத்தை 
குணப்படுத்த வில்லை 
விளைவு - என் 
பச்சிளம் தேகம் 
பரிதவிக்கிறது உன்னுள்.... 

பார்ப்பவை எல்லாம் தனதாக்கி 
கொள்ளும் கயவனே - பார் 
நான் படும் வேதனையை... 

உங்கள் அலட்சியத்திற்கு 
அவசரமாய் போகுது 
எங்கள் உயிர்... 

தேகம் சுருங்கி போனது 
நா வறண்டு போனது 
கண் இமைகள் மூடி போனது 
வாழ்வும் தூரம் போனது 
எங்கள் உயிர் தூசுதானே 
என் செய்ய 
ஏழைகள் தானே நாங்கள்... 

உங்கள் பிழைகள் 
மறந்து போகும் 
மறைந்து போகும் 
என் செய்ய 
ஏழைகள் தானே நாங்கள்... 

- மூ.முத்துச்செல்வி

Friday, 24 November 2017

அப்பா


அப்பா
தனக்கென்று எதுவும் இல்லை.... 
என் உழைப்புகள் அனைத்தும் 
தன் தோளில் வளர்ந்த 
தன் செல்வங்களுக்கு தான் 
என நினைப்பவர் தான் 
என் அப்பா...... 

-மூ.முத்துச்செல்வி

வாடா மகனே வா


மரக் கன்னு நா வைத்தேன் 
மகனே நீ விளையாட!! 

துள்ளி நீ ஆட 
துடிக்குது தாய் உள்ளம்!! 

தோள் சாய 
தோழனே நீ வாடா!! 

பறவை கானப் பொழுதில் 
கேள்விகள் நீ கேட்டிட வாடா!! 

பருவம் நான் அடைந்தும் 
பழுக்காத என் - பனிக்குடம் 
நிரப்பிட வாடா!! 

பேறு நான் பெற 
மன்னவனே வாடா!! 

உள்ளக்குமுறல் நீக்கிட 
உள்ளம் மகிழ வாடா!! 

வெள்ளமாய் நான் 
கண்ணீர் வடித்தாலும் 
தெப்பமாய் நீ மிதக்க வாடா!! 

தூக்கி சுமக்க கை துடிக்கிது 
சீக்கிரம் வாடா செல்லமே!! 

ஊரு வாய் அடைக்க 
உத்தமனே நீ வாடா!! 

போற்றட்டும் உலகம் 
உன்னை பெற்ற என்னை.. 

உலகம் நீ வெல்ல 
உறுதுணை நான் இருப்பேன்.. 

ஏக்கம் நிறைந்து கோருகிறேன் 
வந்துவிடடா - உன் 
அன்னையிடம்... 

-மூ.முத்துச்செல்வி

என் நொடிகள்


என் நொடிகள்

என் அந்த நாட்கள்... 
வேதணையும் கண்ணீரும் சேர்ந்தது 
நான் வாய்ப்புகள் தேடியும் - எந்த 
வாய்ப்பும் கிடைக்காமல் போன நொடிகள் 
என் திறமையை -என் 
உழைப்பை புதுமையை வெளிக்கொணர 
இன்னும் அமையவில்லை எனக்கான நாட்கள்... 
என் தேவைக்காக -இன்னும் 
தந்தையை சார்ந்திருக்க 
என் மனம் வேதனையை வெளியிடுகிறது.... 
எனக்கான வேலை எனக்கான வாய்ப்பு 
எப்போது அமையும் என்ற வலிகளுடன்..... 

- மூ.முத்துச்செல்வி

மனதில் நீ


தேடி தேடி தேய்கிறேன் 
நீயும் நானும் சந்திகும்வேளையை.... 
உன் முகம் காணும் நேரத்திற்காக 
என் இமைகள் துடிக்கின்றன..... 

அன்பே! 
நீ அருந்தி உதிரும் - ஒற்றை 
துளி தண்ணீர்க்காக 
தாகத்தில் தவிக்கிறது என் நா.... 

நீயும் நானும் பேசிக்கொள்ளும் 
வார்த்தைக்களுக்காக ஏங்குகிறது 
என் வார்த்தைகள்..... 

பெண்ணே! 
என் மனதில் நீ இருக்கும் வரையில் 
நீ வேறு நான் வேறு என்ற 
எண்ணம் மட்டும் தோன்றுவதில்லை.... 

என் நாட்காட்டி 
தன் நாட்களை
 குறைகிறது 
உன்னை நான் பார்க்கின்ற நாளுக்காக..... 

விரைவில் சந்திப்போமா!..... 
என் மனதில் உள்ள கேள்விகளுடன் 
என் நிமிடங்கள்........ 

-மூ.முத்துச்செல்வி

Thursday, 16 November 2017

தமிழ்

கூரிய வாள் கொண்டு 
வெட்டினாலும் - எங்கள் 
கேடயம் ஒன்றே!! 

தேகம் வேறுபட்டாலும் 
போற்றுகின்ற - எங்கள் 
சரணம் ஒன்றே!! 

கலைகள் பல 
நிகழ்ந்தாலும் - எங்கள் 
ஆரம்பம் ஒன்றே!! 

பல்வகை மொழி 
பயின்றாலும் - எங்கள் 
ஆதி ஒன்றே!! 

போர்கள் பல 
புரிந்தாலும் - எங்கள் 
வேட்கை ஒன்றே!! 

வேதங்கள் பல 
பெருகினாலும் - எங்கள் 
உயிர் மெய் என்றும் ஒன்றே!! 

- மூ.முத்துச்செல்வி

எது மெய்யோ




பனிக்குடம் உடைந்து 
வந்த மெய்... 
மண்குடம் உடைந்துப் 
போகிற மெய்.. 

வருகைக்கு இரு கை 
துணை... 
முடிவிற்கு நான்கு கை 
துணை... 

எதுவும் மெய் 
இல்லை.... 
எதுவும் நிலை 
இல்லை.... 

இதுதான் 
இயற்கையெனில் 
எதுதான் 
மெய்யோ???? 

- மூ.முத்துச்செல்வி

என்னவள் முன்



மழை அழகு காண 
குடை விரிக்கும் 
மழை காளான் - என்னவள் 
குடை விரிப்பின் முன் 
தோற்றுப்போகும்.... 

நாதம் இசைக்கும் 
இசைச்சுருள் -என்னவள் 
பாத கொலுசு முன் 
தோற்றுப்போகும்.... 

சிற்பியின் கையில் உதிர்த்த 
சிற்ப மெல்லிடை - என்னவள் 
பளிங்கு இடையின் முன் 
தோற்றுப்போகும்.... 

கூந்தல் விரித்த கரிய 
கார்மேகம் - என்னவள் 
கூந்தல் அலையின் முன் 
தோற்றுப்போகும்.... 

அவளின் பாசத்திற்கு முன் 
அனைத்தும் 
தோற்றுப்போகும்... 

- மூ.முத்துச்செல்வி


Tuesday, 14 November 2017

நம் காதலின் பிறப்பிடம் எதுவோ???

நம் காதலின் பிறப்பிடம் எதுவோ

மோக கண்கள் 
மோதி கொண்ட நேரம் 
உதித்ததோ நம் காதல்..... 

அம்மாவாசை நிழலில் ஒழிந்த 
திங்களை தேடும் பொழுது 
மலர்ந்ததோ நம் காதல்.... 

பவள வாய் திறந்து 
மதுகரம் பேசிய நொடிகளில் 
வெளிப்பட்டதோ நம் காதல்.... 

சிவந்த அலகில் கிளிகள் - தன் 
சிறகை அழகுடன் வருடிய கணம் 
சிறகு விரித்ததோ நம் காதல்... 

வற்றிய குளம் கண்ட கொக்கு போல் 
உன் பிரிவு என்னை வாட்டிய போது 
தோன்றியதோ நம் காதல்... 

என் கவிதை வரிகளை 
நீ வாசிக்க கேட்ட தருணம் 
மனம் சேர்ந்ததோ நம் காதல்.... 

முழுமதி ஒளியில் 
முகம் ரெண்டும் உரசிய போது 
பூத்ததோ நம் காதல்... 

புற்கள் முளைக்கும் சந்தம் போல் 
நம் இமைகள் சந்தம் பேசி 
முளைத்ததோ நம் காதல்... 

கிளையிடை தென்றல் 
தோல் வருடிய மென்மையில் 
இசைத்ததோ நம் காதல்... 

மேகத்திரள் வீசிய பனித்துளி 
மண் வந்து விழும் வைகறையில் 
கனிந்ததோ நம் காதல்... 

சண்டைகள் பல செய்து 
உருவாகிய மௌன இசையில் 
காதோரம் வந்ததோ நம் காதல்... 

பிறப்பிடம் எதுவாகினும் 
இருப்பிடம் நம் மனமே 
மாறாத நம் காதல்... 

- மூ.முத்துச்செல்வி

Monday, 13 November 2017

அவள் அருகில் இல்லை


அவள் அருகில் இல்லை

வீழ்கின்ற போது தோள் தாங்கியவள் 
நா தழும்ப என் பெயர் உச்சரித்தவள் 
சுட்டு விரல் பிடித்து முன்னே நடந்தவள் 
ஜனனம், மரணம் கற்பித்தவள் 
கண்ணீர் துளியின் ரணம் தந்தவள் 
மழலை சின அழகு தரித்தவள் 
தலையணை ஈரம் ஊட்டியவள் 
நீள்கின்ற பாத பின்னலை காண்பித்தவள் 
குடை சாரல் மழையில் நனைத்தவள் 
சுகமும், சோகமும் ஒருசேர கலந்தவள் 
தோள்களில் தலையணை பின்னியவள் 
மடியில் என் தலை பாரம் தூக்கியவள் 
நிலவொளியில் கனவில் வந்தவள் 
இன்று இல்லை 
என் அருகில்...... 

- மூ.முத்துச்செல்வி

Thursday, 9 November 2017

யாரை தூது அனுப்ப

யாரை தூது அனுப்ப


பிறை நிலவை தூது அனுப்பினேன் 
உன் மோக கண்ணை நோக்கியதால் 
முழுமதி ஆனது... 

நீலக்கடலை தூது அனுப்பினேன் 
உன் கால்கள் தொட்டதால் 
வெண் பூ அலை ஆனது.. 

செங்கதிர் வீசும் ஞாயிறை தூது அனுப்பினேன் 
உன் மேனி அழகில் 
தன் கதிரை மறைத்து பால் நிழல் ஆனது.. 

சந்தங்கள் ஒன்றிணைத்து தூது அனுப்பினேன் 
உன் பாதக் கொலுசொலி கேட்டு 
கொலுசின் மணி ஆனது 

கற்குவியலை தூது அனுப்பினேன் 
உன் சேலை மடிப்பு வருடியதால் 
சுமக்கும் கல் மேடை ஆனது.. 

புறாவை தூது அனுப்பினேன் 
உன் கை அசைவை கண்டு 
உன் மடியில் சரணம் ஆனது... 

கவிதை மடலை தூது அனுப்பினேன் 
உன் புன் சிரிப்பில் விழுந்து 
என் கவிதை மறைத்து வெள்ளை காகிதம் ஆனது.. 

சூரைக்காற்றை தூது அனுப்பினேன் 
உன் காதணி நடனத்தில் மயங்கி 
தென்றலாய் உன்னை தழுவியது... 

கருமேகத்தை தூது அனுப்பினேன் 
உன் மழலை மனதில் உருகி 
மழை வெள்ளம் ஆனது... 

இலையுதிர் மரங்களை தூது அனுப்பினேன் 
நீ தொட்ட பரிசத்தால் 
உனக்கு நிழல் தரும் நந்தவனம் ஆனது.. 

புன்செய் நிலத்தை தூது அனுப்பினேன் 
உன் வியர்வை துளி விழுந்ததால் 
உன் பாதம் ஏந்தும் புல்தரை ஆனது.. 

இறுதியாக 
பூமியை தூது போக சொன்னேன் 
உன் மோகன வலையில் சுழன்று 
உன்னை மட்டும் சுற்றுகிறது.. 

தூது அனுப்பியது எல்லாம் 
உன் மேல் காதல் கொள்ள 
நான் யாரை தூது அனுப்புவேன்???... 

- மூ.முத்துச்செல்வி



பெண் விடுதலை


பெண் விடுதலை

பண்பாடு பாரதம் சொல்லி 
பாகுபடுத்திய தேசம் 
பண் பாடி வளர்கிறது 
பகுத்தறிவு தேசம் 

அடுக்களை அறை மட்டும் சொந்தம் 
அடையாளம் தெரியா தேசம் 
அமைதிக்கு குரல் கொடுத்து 
அகிலம் தெரிந்த தேசம் 

அண்ணாந்து பார்த்து வானம் 
அளவறிந்த உலகம் 
ஆகாச ரதம் அதில் ஏறி - வானம் 
அளக்கும் தேசம் 

ஆணுக்கு நிகர் பெண் 
சொல்லாதே மனிதா!! 
பெண்ணுக்கு நிகர் ஆண் இல்லை 
சான்று உன் அன்னை போதும்.... 

கடவுளின் சக்தி 
ஆன்மாவின் கரு 
பனிக்குடம் சுமந்து 
பக்குவம் பார்த்தவள் 

பாரதி கண்ட பெண்மை 
அடிமை நிலை மாறியும் 
இன்றும் கிடைக்கவில்லை 
பெண் விடுதலை !!! 

பேருந்தில் உரசியும் 
காம பார்வை வீசியும் 
தனிமைப் படுத்தும் மனிதா 
மாற வேண்டியது உன் மனமே!! 

-மூ.முத்துச்செல்வி

Monday, 6 November 2017

அன்னைக்கு ஒரு கவிதை



வேந்தன் நுந்தை பெற்ற
அலகிலா வனப்பு 
எந்தை ஞால துணைவி 
பண் போற்றும் மதுரம் 
அடவி சூழ்ந்த உள்ளும் 
அடங்கும் உன் முன்
அழகிய பூ திரளாய் 
மழலை சினம்  
மலரொத்த மனம் 
கவிஞர்கள் உலாவித் 
திரட்டிய காவிய
முழு அகராதி என் முன்...
எந்தைப் பெற்ற வரம் 
எம்மவர் செய்த தவம்  
இரவியிடம் இறைஞ்சி 
யான் பெற்ற பொற்கிழி
இருட்சி நீக்க வந்த 
இறைவி யே!
ஞாயும் போற்றும் 
எம் யாய் யே!...

-மூ.முத்துச்செல்வி 



Sunday, 5 November 2017

முழுமதி பார்வை

உன் விரல் மொட்டாட 

ஓடிய மேகமும் கூடிட 
சுட்ட நெருப்பில் சுகம் காண 
பிறை நிலா மேக அலையில் நீந்திட 
உன் பாத சுவடோசை 
வசந்தமாய் உன் வருகை 

முழுமதி என்னை கடந்திட 
மொழிகள் புதிராக 
உளறல் செவி எட்ட 
காத்திருக்கிறேன் மீண்டும் 
முழுமதி காண.. 

மேகமாய் நீ ஓடிட 
வானமாய் நான் ஓய்ந்திட 
அடுத்த கணம் எனதில்லை 
அடுத்த நொடி எனதில்லை - இருந்தும் 
கால் கடுக்க காத்திருப்பு... 

பின்னிக் கொண்ட கால்கள் 
நான்கும் பிரிந்தோட 
விழிநீரும் வழிந்தோட 
கரைரெண்டும் பிரிய 
கண்ணீர் நடுவே ஓடிட 

எனக்கில்லை என்றே உணர்ந்தும் 
மனம் மட்டும் உன்னை சுற்றும் 
கரடு முரடாய் நானிருந்தும் 
கனி சுளை என்னுள் நீ!! 

கவிதை வரிகள் சொல்லும் - உன் 
நினைவின் வலிகள்.. 
உன் குரல் அருகில் இல்லை 
என் வரிகள் வாசிக்க.. 

ஓரக்கண் பார்வை 
உதடோரம் சிறு புன்னகை 
மது வேண்டாம் - உன் 
விரலிடை மரணம் போதும் 

- மூ.முத்துச்செல்வி

கிராமம் நகரமானால்












கிராமம் நகரமானால்!!! 
பல தலைமுறை பண்பாடு 
பாழ்படும் 

அன்று 
விவசாய பள்ளிகள் 
இன்று 
பூமித்துளையிடும் கருவிகள்.... 

காற்று தரும் சுகம் - அதை ரசித்து 
மழைதுளியும் முத்தமிடும் 
பூமியை -இன்று 
மழையும் பயம் கொள்கிறது 
எம் நிலத்தின் நிலை கண்டு.. 

மாதம் மாரி எட்டிப்பார்க்க 
விதைதான் விவசாயத்தை.. 
மாரியும் பொய்த்து - கலப்பை ஏந்திய 
மனிதனும் போகிறான்.... 

நகர வீதிதோறும் மருத்துவம் 
கிராம பாட்டியின் -கை 
மருத்துவத்திற்கு ஈடில்லை 

வடக்கு வளர 
தெற்கு சுருங்குகிறது 
நாகரிக வளர்ச்சிக்கு 
பழி 
கிராமம்!!! 

நகரம் கிராமமானால் 
செயற்கை கோளும் செய்யும் 
விவசாயம்.... 

-மூ.முத்துச்செல்வி

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...