Tuesday, 23 January 2018

முதுமை வந்துவிட்டது


வேட்க்கை தீர்ந்ததும் 
யாக்கை புரிந்ததும்
காக்கை அழகானது 

கொள்கை தளர்ந்தது 
கேளிக்கை மிகுந்தது
வாழ்க்கை தெரிந்தது 

இருந்தும் 

கயிறிட துடிக்குது 
கால் விரல்கள்...

மூக்கு கண்ணாடி தேடுது 
கை விரல்கள் 

அவனோ! அவளோ! 
கவனிப்பதில்லை - இருந்தும் 
புலம்பும் உதடுகள்...

கதைகள் பல கேட்க 
துடிக்குது செவிகள் 

கதை சொல்லத்தான் 
இல்லை உறவுகள் 

ஓடி ஓடி 
முதுமை வந்தது 
ஓய்வில் புரிகிறது 
தனிமையும்!!!

- மூ.முத்துச்செல்வி  

Saturday, 13 January 2018

பொங்கலோ பொங்கல்


மஞ்சள் குழை
மயக்கத்தில் 
மந்திர புன்னகை 
மண்பானை பொங்கல் 
பொங்குதம்மா!!!

மார்கழி பிரசவத்தில்
தைப் பிறந்ததம்மா
தையல் நாயகி
அருள் கிடைத்தம்மா!!!

ஆடிப்பட்டம் தேடி
விதைத்த விதை
பக்குவமாய் 
அறுவடை ஆனதம்மா !!

உழவன் வியர்வை கண்டு
கொதித்த சூரியனும்
அவன் சிரிப்பில்
பிரகாசிக்குமம்மா!!!

கூடி மகிழ்ந்து
மதம், இனம் மறந்து
பொங்கட்டும் பொங்கலம்மா!!!

- மூ.முத்துச்செல்வி


Friday, 12 January 2018

என் செய்ய


மண்ணெண்ணெய்
 இல்லை 
மக்கள் திட்டம் 
மட்டும்

நடக்க சாலை இல்லை
பறக்க விமானம்
கேட்கிறது 

நிற்க நிழலும் இல்லை
நிழற்குடைக்கு
இலட்சத்தில் கணக்கு

எல்லாம் இலவசம்
அதனால் 
வறுமையும் இலவசம் 

உணவுக்குப் பிச்சை 
அதிலும் சர்ச்சை

பகுத்தறிவில்லா கல்வி
அதன் விளைவு
மூடத்தனத்தில் கூட்டம்

சிலர் 
வயிறு பெருக
பலர் 
வயிறு காய்கிறது 

ஊழல் மட்டும் 
இங்கில்லை
உதவாதக கல்வியும்
தான்....

-மூ.முத்துச்செல்வி

Thursday, 11 January 2018

ஏன் பிறந்தேன்??


நானிலம் போற்ற 
நான் பிறந்தேனாம்!
நான் இருக்கும் 
நிலம்கூட போற்றவில்லை...

பார் புகழ 
பிறந்தேனாம்!
பாராட்டக்கூட ஆள் இல்லை...

நான் இருக்கும் இடம்
பிறக்கும் போது சோலை 
வளரும் போது பாலை
என் வாழ்வு
என்றும் பாலை...

பூமிக்கு பாரமாக 
நான் பிறந்தேனா??
இல்லை 
வையகம் போற்ற 
நான் பிறந்தேனா??

- மூ.முத்துச்செல்வி 

நீயும் நானும்

முடி கோதிடும் விரல்கள் 
மடி சாய்ந்திடும் தலை 
கணவன் என்ற 
போர்வைக்குள் நான் 
மனைவி என்ற 
தலையணை நீ!
தென்றல் வீசிடும் 
நம் காதல்...
ஊசல் கடிகாரம் போல் 
ஊசலாடுகிறது மனம் 
வலக்கை, இடக்கை விதியும் 
விதிவிலக்கானது 
இரு கைகள் பின்னியதும்..
சில நேரம் 
போரிட நான் 
வாதத்திற்கு நீ 
வாய்தா ஏற்றது வாதம் 
வசந்தம் வந்தது 
வாசலில் - இணைந்து 
வருடுவோம்...
வருடம் ஓடினாலும் 
வயதுகள் ஓடினாலும் 
வழித்துணையாக நான் 
மாறாது நம் காதல்....

- மூ.முத்துச்செல்வி 

Monday, 8 January 2018

கன்னித்தமிழும் கத்துக்குட்டியும்


கன்னித்தமிழ் நீ 
கத்துக்குட்டி நான் 
லெமூரியா மலர் நீ 
தும்பி நான் 
வல்லினம் நீ
மெல்லினம் நான் 
இடையினமாய் நம் காதல்!!
வலி மிகும், மிகா இடம் நீ
ஒற்று பிழை நான் 
உன்னை நீங்கினில்
சுற்றும் பிழை தான் 
இலக்கணம் நீ 
இலக்கியம் நான் 
இலக்கணம் இல்லையேல் 
இலக்கியம் ஏது??
அணிகலன் மாலை நீ
அளபெடை நான்
உயிர் நீ 
மெய் நான் 
உயிர் இல்லையேல் 
மெய் சடலமே

மூ.முத்துச்செல்வி

தோழியுடன் நான்


தோழியே!
உனக்காக கண்ணீர் சிந்த 
நான் இருக்கிறேன்
சுமைகளை என்னோடு இறக்கிவிடு 
நிலம் தாங்கும் முன் 
உன் கண்ணீர் துளிகளை 
தாங்கும் என் கைகள் 

உன் 
மகிழ்வில் நான் மகிழ்வேன் 
மகிழ்வதை இரட்டிப்பாக்கு 
சிரிக்கும் உதடுகளுடன் 
நீளட்டும் நம்  பயணம் 

மழலை மொழி 
மகிழ்வதை போல் 
உன் மலர் போன்ற இன்பம் 
மலர்ந்து விரியட்டும் 
மணம் வீசட்டும்

தோழியே! மறவாதே !!
உன் 
துன்பத்தின் முன் நான் நிற்பேன்! 
இன்பத்தின் பின் நான் நிற்பேன்! 

-மூ.முத்துச்செல்வி





கீரைக்காரி

கீரை வித்து எம்பொழப்போட
கூடையோட நா போக 
வந்தவக எல்லாம் 
பேரம் பேச 
கூடையோட காயுது 
என் வயிறும்....

கீரை கீரைனு!! 
நான் கூவ 
எசப்பாட்டு பாட காத்திருக்கு 
கருப்பு  மவராசா
கா கானு கத்திக்கிட்டு 

கொல்லையில் முருங்க வச்சேன் 
பக்குவமா பாதுகாத்தேன் 
நான் வளர்த்த மரம் 
பூவிடும் முன்னே 
காய்க்கு ஏலம் எடுக்க 
காத்திருக்கு ஒரு கூட்டம் 

வந்தவர் எல்லாம் பறிச்சி போக 
என் சோறு மட்டும் 
மிளகாய் தேடுது 
ஒத்த காசு நா கேட்டா 
உச்சியிலே அடிப்பாக 
ஒத்த உசுருக்கு காசு எதுக்கு 
சொல்லித்தான் சிரிப்பாக 
இப்படி போனா 
எம்பொழப்பு எப்படித்தான் போகுமோ!

-மூ.முத்துச்செல்வி 

Saturday, 6 January 2018

ஹைக்கூ


பாரதியின் சினத்தைக் கண்டு 
பயத்தில் சிவந்தனவோ 
சூரிய கதிர்கள் 

-மூ.முத்துச்செல்வி 

என்செய்வேன் தமிழே!

மெட்டெடுத்து 
நான் பாட 
ஆதியாய் 
நீ நின்றாய் 
வரிகள் வடிவில் 
உன் உருவம் தந்தாய்! 

ழகர அழகில் 
மழலை வாசித்தாய் 
மறுகணம்..
உன் மடி விழுந்தேன்!

மௌன மொழியில் 
எதுகை விரித்தாய் 
மோனையானேன் உன்னிடத்தில்!

உவமைகள் 
பல வீசினேன் 
அதிலும்.. 
உருவகமாய் நீ மட்டுமே!

காதல் பொழிந்தேன் 
அதிலும்.. 
நாணத்தை சிந்தினாய்!

என்செய்வேன் தமிழே!
உன்னைத் 
தொழுவதைத் தவிர 
வேறென் செய்வேன்!!

- மூ.முத்துச்செல்வி

முழுநிலவு


என் கருநிற விழி 
அமாவாசையில் ஒளிர்ந்த 
பௌர்ணமி 

- மூ.முத்துச்செல்வி 

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...