Wednesday, 21 March 2018

எல்லாம் அவன் செயல்

எல்லாம் அவன் செயல்
என்றே உள்ளம் கொண்டு
நல்லாள் வழி
நடந்திடு மானிடனே!
நமை விதையாய் தூவிய
அவன் கைகள்
மழையாய்ப் பொழிந்து
நமை காத்திடுமே!
பயிராய் நாம் முளைத்து
மரமாய் நாம் வளர
ஒளியாய் அவன் நிற்பான்
அண்டங்கள் பயிலும்
அறிவை வளர்ப்போம்!
நெஞ்சங்கள் இணையும்
நல் உறவு வளர்ப்போம்!
தேசங்கள் தாண்டியும்
பாசங்கள் வளர்ப்போம்!

- மூ.முத்துச்செல்வி 

Tuesday, 20 March 2018

அவளே என் தோழி....


பிரம்மன் படைத்த
        பிறவி தோழி
பார்வையில்
        புன்னகை
உதட்டில் உருளும்
        உபசரிப்பு
பெண்மையின்
        மென்மை
ஆறுதல் தரும்
        ஆரவாரம்
அழகிய மனம்
        அவளே என் தோழி....

- மூ.முத்துச்செல்வி

மனித சக்தி







மண் மீது
மழைக் கொண்ட காதல்
மனித சக்தியால்
மாண்டுபோகிறது

-மூ.முத்துச்செல்வி

Friday, 9 March 2018

ஹைக்கூ


மயில் தோகையில் 
மடிந்த நிறங்கள் போல் 
அவள் கன்னங்களில் 
சிவப்புப் பருக்கள்.

- மூ.முத்துச்செல்வி  

என்னையும் வென்றது


மேவிய வாய் 
        தடவிடும் மான்கூட்டங்கள் 

பளிங்கு தேசத்தில் பற்கள் 
       அங்கொன்றும் இங்கொன்றும்

அன்னம் தன் அலகால் 
        செதுக்கிய 
                   தவழும் பாதங்கள்

சிறு கைப் பைக்குள் 
        சிக்கியது சுண்டுவிரல்

உலகையே வென்ற காதல் 
         என்னையும் வென்றது

மகளே உன் சிரிப்பில்!
         மழலையானேன் நான்! 

- மூ.முத்துச்செல்வி


Thursday, 8 March 2018

ஹைக்கூ


தன் கண்ணீர் 
உலகறிய 
இடியைத் துணை 
அழைத்ததோ மேகங்கள் 


- மூ.முத்துச்செல்வி

ஹைக்கூ


சுவாசிக்கும் 
சிசுவிடம் 
வாசிக்கச் சொல்கிறது 
இன்றைய கல்வி 


- மூ.முத்துச்செல்வி

Monday, 5 March 2018

சாதனைப் பெண்ணே


தமிழுக்கு ஆத்திசூடி 
தந்திட்ட ஔவை!
வேல் ஏந்திய 
வீர மங்கை 
வேலு நாச்சியார்!
வெள்ளையர்களை 
வெளியேற்றிய போர் மங்கை 
ஜான்சி ராணி!
தொழு நோயும் 
தொழுதிட்ட 
அன்னை தெரசா! 
வீண்மீன்களும் வியந்த 
கல்பனா சாவ்லா!
குரல் வலையில் 
கட்டிய சுப்புலட்சுமி! 
இவர்கள் 
பிறந்த மண்ணில் தான் 
சாதனைப் பெண்ணே 
நாமும் பிறந்தோம்.
இவர்களின் தலைமுறை நாம்
பாராட்டும் பாரதம்
நம் புகழ் பாடி...
பூமியும் வரையும்
நம் பாதசுவடை...
படைத்திடுவோம் புது வரலாறு....

- மூ.முத்துச்செல்வி 

எழுவாய் பெண்ணே!


எழுவாய் பெண்ணே!
புதியவை மலர 
பழையவை பாதுகாக்க 
எழுவாய் பெண்ணே
கைவிலங்கு உடைத்து 
கைமணம் பரப்பிட 
உன் கைகளின் வலிமையை 
உலகறியட்டும்!
வா பெண்ணே!
துணிவுகளின் அகராதி நீ!
துயரங்களின் ஆறுதல் நீ!
உன் கண்ணீரின் ரணம்
சிந்தியதால் 
பூமி தாயின் தேகம் சுடுகிறது. 
வழியும் கண்ணீரை 
துடைத்திடு!
வீறுகொண்டு தொடர்ந்திடு!
சாதனைகளின் வடிவங்கள் 
சுமந்தவள் நீ!
அன்னை நீ!
தோழி நீ!
வலிமை நீ!
அனைத்தும் நீயே!
உன் பாதச்சுவடுகள் 
உலகில் பரவிட 
உன் புகழ் 
உலகினர் செவிகளில் 
புத்துணர்வு படைத்திட 
வருவாய் பெண்ணே!

- மூ.முத்துச்செல்வி 


உயிர்களின் அன்னையே!

பூமி தாயே! 
நான் உதிர்த்த முத்தங்கள் 
உன் கன்னத்தை வருடியது! 
உன் முத்தங்கள் 
என் மகிழ்ச்சியை வருடுவது 
எப்போது? 

உன் கைகளில் 
முளைத்த கிளைகள் 
உயிர் மூச்சாய் 
என்னுள் வீச - தாயே! 
என் உயிர் நீ என்று 
உணர்ந்துகொண்டேன்! 

என் வலசை போகும் பாதங்கள் 
உன் அதிசய தேகங்களைக் 
காயம் செய்திடில் 
மன்னித்து புன்னகை புரிந்துவிடு! 

உன் களை 
நான் அகற்சி 
உன் புல் மடி 
தலை வைத்து தூங்கிடும் 
சுகம் மட்டும் போதும்! 

உயிர்களின் அன்னையே! 
என் வாழ்வில் 
காற்புள்ளியும் நீயே! 
முற்றுப்புள்ளியும் நீயே! 

- மூ.முத்துச்செல்வி

Sunday, 4 March 2018

அப்பா


தாயின் அன்பில் 

பெருமை கொண்ட 
வரிகள் - ஏன் 
உன் அன்பை 
போற்றவில்லை?. 

கருவில் சுமந்தவளைப் 
பாராட்டிய வரிகள் - ஏன் 
உன் வாழ்நாள் சுமையை 
எண்ணவில்லை?. 

அன்னையின் தியாகத்தைப் பாட 
ஆயிரம் வரி தேடியக் கவிதைகள்- ஏன் 
உன்னை பாட ஒரு வரியும் 
தேடவில்லை?.... 

அவள் தந்த உடல் 
நீ தந்த உயிர் - ஏன் 
உன்னை புகழ மறந்தது? 

ஒருவேளை 
அன்னை போல 
எளிதில் ஏமாறுவாய் என்றால் 
என் கவிதைகளும் 
உன் புகழை பாடி இருக்குமோ! 

-மூ.முத்துச்செல்வி


Thursday, 1 March 2018

இன்றைய நிலை


தேவையற்றதன் வரவேற்பு 
தேவையானவை வெளிநடப்பு! 

விதைகள் முளைக்கும் முன் 
கிளைகள் வளர துடிக்கிறது! 

இரவெல்லாம் பகல் போலும் 
பகலெல்லாம் இரவு போலும்! 

ஆறாம் விரல் தேடுதல் 
ஐந்து விரல்களின் தேய்மானம்! 

வசைபாடும் ஆயிரம் பற்கள் 
வழிகாட்டுதல் இல்லை 

வெற்றிகள் வேண்டும் 
தோல்விகளில் மரணம்! 

- மூ.முத்துச்செல்வி

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...